2023 ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
30 ஜூன் 2023
நாளை (2023 ஜூலை மாதம் 1 ஆம் திகதி) முதல் அமலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
• வீட்டு மின் பாவனையில் 0 முதல் 30 அலகு வரையிலான மாதாந்த நுகர்வு கொண்ட பிரிவுக்கு 65 சதவீத கட்டணக் குறைப்பு. ஒரு அலகு 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்படும். மாதாந்த நிலையான கட்டணம் 400 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக குறைக்கப்படும்.
• 61 முதல் 90 அலகு வரையான பிரிவில், ஒரு அலகுக்கான கட்டணம் ரூபா 42ல் இருந்து 32 ரூபாவாகவும், மாதாந்த நிலையான கட்டணம் ரூபா 650 இல் இருந்து 300 ரூபாவாகவும் குறைக்கப்படும்.
• 91 மற்றும் 120 அலகு பிரிவுகளுக்கு, ஒரு அலகு 42 ரூபாவிலிருந்து 35 ரூபாயாகவும், மாதாந்த நிலையான கட்டணம் 650 ரூபாயில் இருந்து 400 ரூபாயாகவும் குறைக்கப்படும்.
• மத வழிபாட்டுத் தலங்களுக்கு 16 சதவீதம் கட்டணக் குறைப்பு. குறைந்த நுகர்வு கொண்ட வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு அலகு 10 ரூபாய். (30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது). மத வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி அமைப்புகளை உடனடியாக நிறுவ மின்சார சபை மற்றும் லங்கா தனியார் மின்சார நிறுவனத்திற்கு நிபந்தனைகள்
• ஹோட்டல் துறைக்கு 26.3 சதவீத கட்டணம் குறைப்பு
• கைத்தொழில் துறைக்கு 9 சதவீத கட்டண குறைப்பு
• வணிக கட்டிடங்களின் மின்சார கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படும்
• அரச கட்டிடங்களின் மின்சார கட்டணம் ஒரு சதவீதத்தால் குறைக்கப்படும்
இணைப்பு 2
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான நிபந்தனைகள்
1. இலங்கை மின்சார சபையும் (CEB) மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனமும் (LECO) கூட்டு ஆதன அதிகார சபையின் (குடியிருப்பு வளாகங்கள்) நுகர்வோருக்கு பொருந்தக்கூடிய கட்டண பிரிவின் கீழ் கட்டணங்களை உடனடியாக அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வீட்டுத் தொகுதிகளின் பொதுவான பகுதிகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் மற்றும் ஏனைய பராமரிப்புச் செலவுகளை ஈடுசெய்வதற்காக, இலங்கை மின்சாரச் சட்டத்தின் 18வது பிரிவின் கீழ், CEB/LECO, அந்தந்த வீட்டுத் தொகுதிகளின் நிர்வாகக் கூட்டுத்தாபனங்களுடன் சேவை கட்டணம் அமைப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.
2. தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கிட்டு/மதிப்பீடு செய்து மின்சார பட்டியல்களை வழங்க வேண்டும் மற்றும் அதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகள்/ வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் இருந்து அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. மின்சார பாவனையாளர்களிடமிருந்து பெறப்பட்ட பாதுகாப்பு வைப்புத்தொகையை முதலீடு செய்யவும், வருமானத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு வட்டி செலுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. மின்சார பாவனையாளர் உத்தரவாத வைப்புத்தொகைக்கு செலுத்தப்படும் வட்டியை அந்தந்த வாடிக்கையாளரின் மாதாந்திர மின் பட்டியலில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. எரிபொருள் மற்றும் நிலக்கரி விநியோகம் தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை நிலக்கரி நிறுவனத்துடன் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. இலங்கை மின்சார சபை மின் உற்பத்தி நிலையங்களுக்கும் மின்சாரசபையின் மின்பரிமாற்ற பிரிவுக்கும் இடையிலான மின்சாரக் கொள்வனவு ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் மின்சாரசபையின் மின்பரிமாற்ற மற்றும் மின் விநியோகப் பிரிவுக்கு இடையில் மின்சார விற்பனைக்கான ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
7. தற்போது உரிமம் இல்லாமல் இயங்கி வரும் மின்சார சபையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு 2 மாதங்களுக்குள் உரிமம் பெற வேண்டும்.
8. புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து (கூரை சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட) மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும்.
9. இந்த முடிவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள், மின்சார சபை மொத்த வழங்கல் பரிமாற்றக் கணக்கை செயல்படுத்த வேண்டும்.
10. நிகர அளவீடு மற்றும் நிகர கணக்கியல் முறைகளின் கீழ், கூரைமேல் சூரிய சக்தி அமைப்புகளைக் கொண்ட மின்சார நுகர்வோர் அவர்கள் இறக்குமதி செய்யும் மின்சாரத்தின் நிகர அளவின் அடிப்படையில் மாதாந்த நிலையான கட்டணங்கள் வசூலிக்கப்படும். அவர்கள் நிகர ஏற்றுமதி செய்திருந்தால், மாதாந்த கட்டணம் பூச்சிய மாதாந்த மின்சார நுகர்வு அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.
11. இலங்கை மின்சார சபையும் (CEB) மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (LECO) ஆகியவை மத வழிபாட்டுத் தலங்களுக்கு கூரைமேல் சூரிய சக்தி அமைப்புகளை நிறுவும் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் மற்றும் இந்த முடிவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் முன்னேற்ற அறிக்கையை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு- மேற்கூறிய நிபந்தனைகளில் 1, 2, 4, 5, 6, 8 மற்றும் 9 ஆகிய விதிகள் கடந்த கட்டண திருத்தத்திலும் விதிக்கப்பட்டுள்ளன என்பது வலியுறுத்தப்படுகிறது.