முறையான எரிபொருள் விலைச் சூத்திரம் இல்லாமையினால் இலங்கை மின்சார சபை மின்சார உற்பத்திக்கு தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டியுள்ளதால், வெளிப்படையான விலைச் சூத்திரத்தை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்மொழிவு.
திங்கள், 18 ஜூலை 2022 |

2022 ஜூலை 18

ஊடக அறிக்கை

 

முறையான எரிபொருள் விலைச் சூத்திரம் இல்லாமையினால் இலங்கை மின்சார சபை மின்சார உற்பத்திக்கு தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டியுள்ளதால், வெளிப்படையான விலைச் சூத்திரத்தை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்மொழிவு.

நியாயமான விலையை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எரிபொருள் விலையை நிர்ணயிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு. ஜனக ரத்நாயக்க வலியுறுத்தினார். இது தொடர்பில் பாராளுமன்றத்தின் கோப் குழுவிற்கும் தாம் தகவல்களை சமர்ப்பித்துள்ளதாக அவர்  தெரிவித்தார். உலக சந்தையில் உள்ள உண்மையான விலைகளுக்கு ஏற்ப இலங்கையில் ஒரு லீற்றர் எரிபொருளின் விலை மேலும் குறைய வேண்டும். எரிபொருளின் உண்மையான விலை தொடர்பில் தாம் முன்னர் முன்வைத்த தரவுகள் சரியானவை என்பதை நிதி அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளதாக நேற்று வெளியான வர்த்தமானி செய்தியொன்றின் மூலம் தெரியவருவதாக திரு.ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

“நேற்று இரவு பெற்றோலின் விலை 20 ரூபாயாக  குறைக்கப்பட்டது. ஒரு லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் விலையை 150 ரூபாவால் குறைக்க முடியும் என இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டியிருந்தேன். சுங்கத் தரவுகளின்படி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் உண்மையான விலைகளின் அடிப்படையில் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த உண்மையான விலை என்ன என்பதை பெற்றோலியத்துறை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் எரிபொருள் விலையை நிர்ணயம் செய்ய வெளிப்படையான அமைப்பு இருக்க வேண்டும். தற்போதைய உலக சந்தை விலைகளின்படி, நேற்று இரவு குறைப்பு மேற்கொள்ளப்பட்ட விலைக்குறைப்பு போதாது. எரிபொருள் விலை தொடர்பில் நான் முன்வைத்த தரவுகளை நேற்று வெளியான மற்றுமொரு பத்திரிகை செய்தியொன்று மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போதைய சந்தை தரவுகள் மற்றும் எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செலுத்தும் உண்மையான விலைகளின் படி ஒரு லீற்றர் எரிபொருளின் உள்ளூர் விலை குறைந்தது 100 ரூபாவால் குறைக்கப்படலாம். நியாயமான செலவுகளின் அடிப்படையில் எவரும் அறியக்கூடிய எளிய முறையில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். மேலும், சந்தையில் முறைகேடுகள் ஏற்படாத வகையில் உரிய காலத்தை அடிப்படையாகக் கொண்ட எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். “சரியான காலத்துக்கேற்ற வரைவு இன்மை மற்றும் பிற நோக்கங்களின் அடிப்படையில் எரிபொருள் விலையை முடிவு செய்யக்கூடாது.”

எரிபொருட்கள் நியாயமான விலையில் இல்லாத காரணமானது மின்சாரக் கட்டணத்தை கடுமையாகப் பாதித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு. ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

“மின்சாரக் கட்டணங்களானது நியாயமான செலவுகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட வெளிப்படையான வழிமுறையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. மின் உற்பத்தி முதல் விநியோகம் வரையிலான அனைத்து செலவுகளும் மின்சார நுகர்வோர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்படுகிறது. தற்போது, 35% மின்சாரம் தற்போதைய எரிபொருள் ஆலைகளில் இருந்து உற்பத்திக்கு செய்யப்படுகிறது. இந்த மின் உற்பத்தி நிலையங்களில் டீசல், மற்றும் நப்தா ஆகிய மூன்று வகையான எரிபொருட்களும் பயன்படுத்துகின்றன. தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கான, மின்சாரத்தை தயாரிக்க தினமும் சுமார் 3250 மெட்ரிக் தொன் எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றது. மின்சார கட்டணத்தை நிர்ணயிக்கும் போது, ​​எரிபொருளுக்கு நியாயமான விலை கொடுக்கிறோமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது இந்த மின்உற்பத்தி நிலையங்களுக்கு ஒரு லீற்றர் டீசல் 419 ரூபாவிற்கு வழங்கப்படுகிறது. ஆனால் சுங்கத் தரவுகளின்படி கணக்கிட்டால், ஒரு லீட்டர் நியாயமான விலை 191 ரூபாயாக இருக்க வேண்டும். அதன்படி, மின் உற்பத்தி நிலையங்களில் ஒவ்வொரு லீட்டருக்கும் 228 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக மின்சார நுகர்வோர் மீது வருடாந்தம் 270 பில்லியன் ரூபா அல்லது 2700 கோடி ரூபா மேலதிக சுமை சுமத்தப்படுகின்றது. நியாயமான விலையில் மின்சார உற்பத்திக்கு எரிபொருளை வழங்கினால், உத்தேச மின் கட்டண திருத்தத்தின் தாக்கத்தை குறைக்க முடியும்.”

தற்போது, ​​உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் நிலை உள்ளது. இதனைப் பயன்படுத்தி இலங்கையில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தொடர்ந்து கச்சா எண்ணெயை வழங்குவதுடன் மின்சார உற்பத்திக்குத் தேவையான அனைத்து வகையான எரிபொருட்களையும் மிகக் குறைந்த விலையில் வழங்க முடியும். மின்சாரக் கட்டணங்களுக்குப் பயன்படுத்தப்படும் விலை முறைமை போன்றே வெளிப்படையான மற்றும் விஞ்ஞான அடிப்படையிலான விலைச் சூத்திரம் மற்றும் விலை நிர்ணயம் என்பன எரிபொருளுக்காகவும் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க வலியுறுத்தினார்.

மின்சார தொழிற்துறையை ஒழுங்குறுத்துகை செய்வதற்காக  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு முழு சட்ட அதிகாரங்களை வழங்கியுள்ளது. 2006 ஆம் ஆண்டு பெற்றோலியத் தொழிலை ஒழுங்குபடுத்த ஆணைக்குழு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பெற்றோலியத் தொழில் தொடர்பான சட்டங்கள், ஒழுங்குறுத்துகை அதிகாரங்களை சட்டப்பூர்வமாக மாற்றும் சட்டங்கள் இன்னும் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படவில்லை. எனவே, பெற்றோலியத்தை ஒழுங்குறுத்துகை செய்வதில் தலையிட ஆணைக்குழு அல்லது வேறு எந்த ஒழுங்குறுத்துகை அமைப்புக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. பெற்றோலிய ஒழுங்குமுறைப் பொறுப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் விரைவில் ஒப்படைக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன். அப்போது எரிபொருள் விலையில் வெளிப்படையான முறையை அமல்படுத்தலாம். அப்போது எரிபொருள் விலை கட்டுப்பாடு, திறமையான விநியோகம், உயர் சேவை நிலை மற்றும் தரம் போன்ற இலக்குகளை அடைய முடியும். இத்தகைய ஒழுங்குறுத்துகை பொறிமுறையானது மின்சாரத் துறைக்கும், கனிம எண்ணெய் நுகர்வோருக்கும் நியாயமான விலையில் எரிபொருளை வழங்குவதன் மூலம் மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறையில் விலை ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.

 

ஜனக ரத்நாயக்க

தலைவர்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு