2018 இல் மின்சார மரணங்கள் 50 சதவீதமாக குறைவடைந்துள்ளது
ஞாயிறு, 9 ஜூன் 2019 |

கடந்த 6 ஆண்டுகளில், இலங்கையில் மின்சாரத்தினால் ஏற்படும் இறப்புக்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் 186 பேர் மின்சார விபத்துக்களினால் இறந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில் மின்சார விபத்துக்களினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக குறைந்துள்ளது. மின்சாரத் தொழிற்துறையின் ஒழுங்குறுத்தல் நிறுவனமான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மூலம் மின்சார தொழிற்துறை பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்ட விரிவான ஒழுங்குறுத்தல் நடவடிக்கைகளே மின்சாரத்தால் ஏற்படும் இறப்புக்கள் குறைவடைய காரணமாக அமைந்துள்ளது. எனினும், சர்வதேச நாடுகளின் தரப்படுத்தலுக்கமைய, மின்சாரத்தினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை ஒரு மில்லியனாக குறைக்கப்படலாம் என கணிப்பிடப்படுகிறது. 2012 ஆம் ஆண்டில், ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 9 மின்சார மரணங்கள் ஏற்பட்டன, 2018 ஆம் ஆண்டில் அவை 5 ஆக குறைக்கப்பட்டன.

2018 ஆம் ஆண்டின் தரவரிசைப்படி, மின் விபத்துக்களினால் ஏற்படும் இறப்புகளில் பெரும்பாலானோர் ஆண்களாவர். இது 83 சதவீதமாகும். அதிக மின் மரணங்கள் பதிவான மாகாணமாக தென் மாகாணம் விளங்குகிறது. 67 சதவீதம் தென்மாகாணத்தில் பதிவாகியுள்ளது. மின் மரணங்கள் குறைந்தளவு சப்ரகமுவ மாகாணம் பதிவாகியுள்ளது. மின் மரணங்கள் அதிகளவு ஏற்படுவதற்கு விலங்கு வேட்டைக்காக வைக்கப்படும் பொறி காரணாமாக அமைந்துள்ளதுடன் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்படும் சட்டவிரோத அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பிகளின் பாவனையும் காரணமாக இருந்துள்ளது. இது தவிர, முறையற்ற மின்கட்டமைப்புகள் மற்றும் மின் வடங்களுக்கு அண்மையில் தேவையற்ற, கவனயீனமான செயல்பாடுகளும் மின்சார மரணங்களுக்கு காரணங்களாக இருந்துள்ளன.

கடந்த சில வருடங்களில், மின்சக்தி பாதுகாப்புக்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு புதிய சட்டங்கள், ஒழுங்குறுத்தல் கருவிகள் மற்றும் கொள்கை பரிந்துரைகள் என்பனவற்றை அறிமுகப்படுத்தியுள்ளன. ப்ளக்குகளுக்கான தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல், பிரதானமின்கட்டமைப்பு, மின் கட்டுமானத்திற்கான பாதுகாப்பு முறைமைகளை அறிமுகப்படுத்துதல், அவற்றுக்காக ஒழுங்குறுத்தல்களை அறிமுகம் செய்துவைத்தல், மின்சார பணியாளர்களுக்கு உரிமம் வழங்குதல் அதற்க்கான நடவடிக்கை எடுத்தல் என்பன இவற்றுள் முக்கியமானவையாகும்.