ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; காணப்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் நாடு முழுவதும் விசேட திட்டம்
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 |

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; காணப்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசேட செயற்திட்டம் ஏனைய மாகாணங்களிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸ், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, இலங்கை மின்சார சபை (இ.மி.ச.), தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (இ.பொ.ப.ஆ.) நிறுவனங்கள் இணைந்து இந்த விசேட செயல்திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. அந்தவகையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹொட்லைன் தொலைபேசி இலக்கத்தினூடாக தங்கள் வீடுகளில் காணப்படும் மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்படும் பிரச்சினையின் அடிப்படையில் அதனை சீர்செய்வதற்கு அப்பிரதேசத்தை சேர்ந்த மின்னியலாளர் அல்லது குமாழ் திருத்தப் பணியாளர் ஒருவரது சேவையை பெற்றுக்கொள்வதற்கு குறித்த பாவைனயாளர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அதனை செயற்படுத்துவதற்கு அப்பிரதேசத்தை சேர்ந்த தொழில்சார் மின்னியலாளர்கள், குழாய் திருத்தப் பணியாளர்கள் மற்றும் பிற அத்தியவசிய சேவை வழங்குனர்களின் தகவல் பட்டியலொன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறான தொழில் வல்லுனர்களின் விபரங்களை பிரதேச பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு வழங்குவதற்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க இச்சேவை வழங்கப்படும்.
ஊரடங்கு உத்தரவு அமுலிலுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துரை மாவட்டங்களில் முதல் கட்டமாக விசேட சேவைக்கான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பாவனையாளர்களின் தேவைக்கேற்ப இவ்விசேட தொழில்நுட்ப உதவியை ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. தங்களது சேவைக்காக ஒரு நியாயமான கட்டணத்தை அறவிடுவதுடன், அதற்காக ஏற்றுக்கொள்ளக்கூடிய பற்றுச் சீட்டொன்றை பாவனையாளர்களுக்கு வழங்குமாறும் மின்னியலாளர்கள் மற்றும் குழாய் திருத்த பணியாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலிலுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்காகவே இந்த விசேட செயல்திட்டம் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த அத்தியவசிய பராமரிப்பு சேவை இன்று முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் விஸ்தரிக்கப்படவுள்ளது. அத்தியவசிய பராமரிப்பு சேவை பிறப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த மின்னியலாளர், குழாய் திருத்த பணியாளர் அல்லது தொழில்நுட்ப வல்லுனர் குறித்த பகுதியின் பொலிஸ் நிலையத்தின் ஊடாக ஊரடங்கு உத்தரவின்போது வெளியே செல்வதற்கான அனுமதி பத்திரமொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த அவசர சேவைகளை வழங்கும் போது குறித்த தொழில்நுட்ப வல்லுனர்கள் (திருத்தப் பணியாளர்கள்) கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய வழிகாட்டுதல்களின் தொகுப்பொன்றை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதற்கமைய தங்கள் வீடுகளில் ஏற்படும் பிரச்சினைகள் தெடர்பில் மின் மற்றும் நீர் பாவனையாளர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அதற்கான சேவையை பெற்றுக் கொள்ளலாம்.
குழாய் திருத்த பணியாளரது சேவையை பெற்றுக்கொள்ள 1939 (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை)
மின்னியலாளரது சேவையை பெற்றுக்கொள்ள 1987 (இலங்கை மின்சார சபையின் பாவனையாளர்களுக்கானது)
தனியார் மின்சார நிறுவனத்தின் (லெகோ) பாவனையாளர்கள் 1910 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி இச்சேவையை பெற்றுக் கொள்ளலாம்.
இல்லையெனில் 0764271030 என்ற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்