இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் இரண்டாம் தடவையாகவும் நடத்தப்பட்ட நுகர்வோர் உரிமைகள் மன்றம் 2017.
ஞாயிறு, 1 ஏப்ரல் 2018 |

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது இரண்டாவது “நுகர்வோர் உரிமைகள் மன்றத்தினை” பல்வேறு விற்பன்னர்கள் அடங்கிய கலந்துரையாடற் குழுவுடன் நடத்தியுள்ளது. இந்நிகழ்வு செவ்வாய் 28 மார்ச் 2017 அன்று சர்வதேசக் கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையத்தில் நடைபெற்றது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிகழ்த்தப்பட்ட இந்த முன்னெடுப்பானது இலங்கையின் மின்சார, பெற்றோலிய மற்றும் நீர்த்துறைகளை சிறந்த பாதைக்கு இட்டுச் செல்வதுடன் அவற்றின் மூலம் நுகர்வோருக்கும் தேசத்திற்கும் நன்மைகளைப் பெற்றுத்தர வல்லதாகும்.

இந்நிகழ்வில் பங்கேற்ற விற்பன்னர்கள் நுகர்வோரின் பார்வைக்கோணத்தில் தொழிற்றுறைகளின் நிலை பற்றியும் நிலைபேறான முறையில் அவற்றை அபிவிருத்தி செய்தல் பற்றியும் தம் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான திரு. தமித்த குமாரசிங்க இந்நிகழ்வின் பிரதான உரையை ஆற்றிய போது, உலகில் தற்போதைய காலத்தில் நிலவுகின்ற நுகர்வோர் உரிமைகளின் அண்மைய பாணிகள் பற்றிக் குறிப்பிட்டதுடன் அவற்றை மின்சாரம், நீர் மற்றும் பெற்றோலியத்துறைகளுடன் இணைத்து நோக்குவதன் அவசியம் குறித்தும் விளக்கினார்.

லங்கா எலெக்ரிசிட்டி தனியார் நிறுவன பொது முகாமையாளரான எச். என். குணசேகர, இமிச – உதவிப் பொது முகாமையாளர் சூலனி பெரேரா, சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் நதுன் ஃபெனாண்டோ, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பொது முகாமையாளர் திரு. டபிள்யூ. பி. ஜி. ஃபெர்னாண்டீ ஆகியோர் இந்நிகழ்வில் பேச்சாளர்களாக தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

ஆணைக்குழுவின் தலைவரான திரு. சாலிய மத்யூ உரையாற்றுகையில் ”மின்சாரம், பெற்றோலியம் நீர் ஆகிய மூன்றும் இன்றைய வாழ்விற்கு இன்றியமையாதன. அதனால் அச்சேவைகளைப்பெறும் நுகர்வோர்கள் தம் உரிமைகளை வலுப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

 

பணிப்பாளர் நாயகம் திரு. தம்மித்த குமாரசிங்க மேலும் கூறுகையில் “எவ்வாறு சேவைத்தரத்தையும் உற்பத்தித்தரத்தையும் உயர்த்தப்போகிறோம் என்பதே நமக்கு முன்னுள்ள சவால். நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகளை எண்ணக்கரு வடிவத்திற்குக் கொணர்ந்தமை இன்றைய இலங்கைக்கு மிகவும் தேவையானது.” என்று கூறினார்.

 

மேலும் அவர் கூறுகையில் “நுகர்வோர் உரிமைகள் மன்றம் 2016 ஆனது பொதுப்பயன்பாடுகளுக்காக பெறுமதி மிக்க ஆலோசனைகளை தந்து சென்றது. இவ்வாண்டும் அதனை நாம் மீள நடத்துகின்றோம். நாம், திட்டமிட்ட மற்றும் திட்டமிடப்படாத மின்சாரத்தடங்கல்களுக்கானதும் மின்சாரச் சேவைக்கணக்கின் பெயர் மாற்றுகை, கட்டணச் சீட்டுப் பெறல், வளாகத்துள் நுழைதல், மின்மானி வாசிப்பு தொடர்பான 11 விதிகள் மற்றும் வழிகாட்டிகளை வெளியிட உள்ளோம்” என்று தெரிவித்தார்.

 

 

— — முற்றும்.– —