அத்தியவசிய பராமரிப்பு சேவை வழங்கப்படும் மின்னியலாளர்கள், குழாய் திருத்தப் பணியாளர்கள், வீட்டு உபகரண மற்றும் எயர் கண்டிஷனர் (AC) திருத்த பணியாளர்களுக்கான வழிகாட்டல்
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 |

1. இலங்கை மின்சார சபை, தனியார் மின்சார நிறுவனம் (லெகோ), தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றின் அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தும் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் கோரிக்கைக்கு அமைய உங்களுக்கு இந்த அத்தியவசிய பராமரிப்பு சேவை பிறப்பிக்கப்படும்.

2. குறித்த மின் அல்லது நீர் பாவனையாளரின் இருப்பிடத்தை அண்மித்து வசிப்பவர்கள் என்ற அடிப்படையில் தொழில் வல்லுனர்கள் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களால் தெரிவுசெய்யப்படுவர்.

3. உங்களுக்கு பராமரிப்பு சேவையொன்று பிறப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஊரடங்கு உத்தரவின் போது வெளியே செல்வதற்கான அனுமதியொன்றை கோரலாம்.

4. உங்கள் இருப்பிடத்தை அண்மித்த பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கங்களை www.police.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

5. ஊரடங்கு உத்தரவின் போது வெளியே செல்வதற்கான அனுமதி பத்திரத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க நீங்கள் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

6. இதன்போது கொரோனா தொற்றை ஒழிப்பதற்காக சுகாதார அமைச்சினால் குறிப்பிடப்பட்ட சுகாதார பரிந்துரைகளை கடைப்பிடிப்பது கட்டாயமானதாகும்.

7. நீங்கள் பெற்றுக் கொடுக்கும் சேவையின் அடிப்படையில் அதற்கான நியாயமான கட்டணமொன்றை வாடிக்கையாளரிடம் அறிவிட முடியும். கட்டணம் தொடர்பில் ஏற்கனவே பேசித் தீர்மானிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

8. நீங்கள் அறவிடும் கட்டணத்தை குறிப்பிட்டு பற்றுச் சீட்டொன்றை வழங்குவதும் அவசியமாகும்.

9. குறித்த தொழில்நுட்ப வல்லுனர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய பட்டியல் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பராமரிக்கப்பட்டு வருவதுடன், தேவைக்கேற்ப புதுப்பிக்கப்படும் அவ்விபரங்கள் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்டும்.

10. இந்த நிபந்தனைகள் தேவைக்கேற்ப திருத்தப்படக் கூடியதுடன், அவ்வாறு திருத்தப்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பில் உங்களுக்கு அறியத்தரப்படும்.

 மேலதிக விபரங்களை அறிந்துக்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ, பேஸ்புக் பக்கத்திற்கு பிரவேசியுங்கள் facebook/pucsl