மின் வாகன மின்னேற்ற நிலைய ஒழுங்குவிதி: பொதுமக்கள் பார்வைக்கான அழைப்பு

ஆலோசனையளிப்பு ஆவணத்தை இங்கு பதிவிறக்குக

(13/09/2017) – இலங்கையின் மின் துறையின் ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்கள் (electric vehicle charging stations) மற்றும் அவற்றுக்கான நுகர்வோர் தொடர்பினால பிரச்சினைகள் மீதான மக்கள் கருத்துகளை எதிர்பார்க்கின்றது. இக்கருத்துகள் இப்பிரச்சினை மீதான ஒழுங்குறுத்துகை நெறிமுறைகளை உருவாக்க உதவும். இவ்வகையான ஒவ்வொரு மின்னேற்ற நிலையங்களுக்கான பதிவேட்டினை ஒவ்வொரு மின்சேவை வழங்குநர்களிடத்தும் (CEB & LECO) அமைத்தல், இம்மின்னேற்ற நிலையங்களுக்கான பயிற்சிக் கோவையை உருவாக்கல், இறுதி நுகர்வேர்களுக்கான வரித்தீர்வை ஆக்கம், பாதுகாப்பு மற்றும் தொழினுட்ப நியமங்கள் வழங்கல் மற்றும் கண்காணிப்பு கோக்கத்தில் தகவல் திரட்டல் போன்ற பணிகளைப் புரிவதற்கு அரசாங்கமானது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வலு அளித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

இலங்கையில் மின்சார மோட்டார் வாகனங்களின் பதிவு ஆனது 2014ம் ஆண்டில் 90 ஆக இருந்தது. அது 2015ம் ஆண்டில் 3,238 ஆக உயர்வடைந்துள்ளது. 2011-2016 ஆண்டு காலப்பகுதியில், இவ்வகை வாகனப் பதிவானது, அண்ணளவாக 4,349 ஆக அமைந்துள்ளது. அனைத்து பிரதான நகரங்களையும் உள்ளடக்கியதாக, தனியாருக்கு சொந்தமான 50 மின் வாகன மின்னேற்ற நிலையங்கள் இலங்கையில் இயங்குகின்றன. இவை பொருத்தமான சட்டப்பின்னணி இல்லாததால் ஒழுங்குறுத்துகை செய்யப்படாமல் உள்ளன.
இப்பிரச்சனை தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் பங்காளர்களிடம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கருத்துகளை அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அதிகாரமளிக்கப்பட்ட மின்வழங்குநர்களிடத்து ஒரு பதிவேட்டினைப் பேணிப் பதிவேற்றம் செய்வதற்கான தேவை, இவ்வகை மின்னேற்ற நிலையங்களுக்கான பயிற்சிக் கோவை, இறுதி நுகர்வேர்களுக்கான வரித்தீர்வை ஆக்கம், பாதுகாப்பு மற்றும் தொழினுட்ப நியமங்கள், இந்த நிலையங்களின் நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் கடமைகள், எதிர்நோக்கும் பிரச்சனைகள், வதிப்பிட மின்னேற்ற வசதிகளுடன் தொடர்பான பிரச்சனைகள் போன்ற விடயப்பரப்புகள் மீது அக்கருத்துகள் இருப்பது விரும்பத் தக்கது.

ஆலோசனை ஆவணத்தின் வரைபானது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் (www.pucsl.gov.lk) மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. தபால் மூலமாகவோ, தொலை நகல் ((011) 2392641) மூலமாகவோ, மின்னஞ்சல் (consultation@pucsl.gov.lk) மூலமாகவோ அல்லது இணையத்தள வழி மூலமாகவோ 11-10-2017 அன்றோ அல்லது முன்போ கருத்துகளை வழங்கலாம். வாய்மொழிமூல கருத்து வழங்கல் நிகழ்வினை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ள ஆணைக்குழு அதுபற்றிய விபரங்களை கூடிய விரைவில் அறிவிக்கும்.

தபால் மூலம் அறிவிப்பதற்கான முகவரி:

மாடி-06, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், இல.28, புனித மைக்கிள்ஸ் வீதி, கொழும்பு 03.