நாட்டிலுள்ள ஒரு சில பௌதீக உட்கட்டமைப்புக் கைத்தொழில்களை ஒழுங்குறுத்தும் முகமாக இந்த இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (இபொபஆ) 2002 இன் 35 ஆம் இலக்கச் சட்டத்தினால் ஓர் பல துறை ஒழுங்குறுத்தும் அமைப்பாகத் தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு அதன் முதல் ஆணையாளர்கள் குழுவினதும், இன்னும் அதன் பணிப்பாளர் நாயகத்தினதும் நியமனத்தைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் செயல்வலுப்பெற்று இயங்கத் தொடங்கியது. இபொபஆ சட்டமானது, அடிப்படை ரீதியில், மின்சார மற்றும் நீர் சார்ந்த சேவைக் கைத்தொழில்களை ஒழுங்குறுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை வழங்கியிருக்கின்றது. 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் பெற்றோலிய அகழ்வுக் கைத்தொழிலும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஒழுங்குறுத்தப்பட வேண்டிய கைத்தொழில்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் சட்டவாக்கத்தைத் தொடர்ந்து, இபொபஆ மின்சக்தி உற்பத்திக் கைத்தொழிலின் சிக்கனம் வாய்ந்த, பாதுகாப்பான, தொழில்நுட்ப ஒழுங்குறுத்துநராக மாறியது. மின்சக்தி உற்பத்திக் கைத்தொழிலுள்ள போதியளவான முதலீடு, பெரும் கிடைப்புத்தன்மை, வினைத்திறன் வாய்ந்த மின்சார விநியோகம், மற்றும் மேம்பட்ட சேவைகள் தரம் என்பவற்றை உத்தரவாதப்படுத்தும் நோக்கில், இபொபஆ இலங்கையிலுள்ள மின்சார உற்பத்திக் கைத்தொழில், மின்சார விநியோகம், மின்சார செலுத்துகை மற்றும் மின்சாரப் பகிர்ந்தளிப்பு ஆகிய விடயங்களை ஒழுங்குறுத்துகின்றது. அத்தகைய கைத்தொழில்களின் ஒழுங்குறுத்துநராகத் தொழிற்படும் வகையில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (இபொபஆ) அதிகாரத் தத்துவமளிக்கும் பொருட்டு பெற்றோலியக் கைத்தொழிலும் நீர் சார்ந்த சேவைகளிலும் இன்று உத்தேச சட்டவாக்கங்கள் வரையப்பட்டு வருகின்றன.